ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், ’பார்க்கிங்’ திரைப்படம் 3 விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த துணை நடிகர் (எம்.எஸ்.பாஸ்கர்), சிறந்த திரைக்கதை (ராம்குமார் பாலகிருஷ்ணன்) உள்ளிட்ட விருதுகளை ‘பார்க்கிங்’ படம் பெற்றுள்ளது.
இதுதவிர, சிறந்த நடிகருக்கான விருது - ஷாருக்கான் (அட்லி இயக்கிய ஜவான்) மற்றும் விக்ராந்த் மஸ்ஸே (12th பெயில்) ஆகியோருக்கும், சிறந்த நடிகைக்கான விருது ராணி முகர்ஜிக்கும் (சாட்டர்ஜி vs நார்வே) அறிவிக்கப்பட்டுள்ளது.
33 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விருதை நடிகர் ஷாருக் கான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறந்த இசையமைப்பாளர் விருது ’வாத்தி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகை விருது, ’உள்ளொழுக்கு ’ படத்திற்காக நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர, சிறந்த தெலுங்கு திரைப்படமாக, பாலையா நடித்த ’பகவந்த் கேசரி’, சிறந்த ஒடியா திரைப்படமாக ’புஷ்கரா’, சிறந்த மராத்தி திரைப்படமாக ’ஷாய்சி ஆய்’, சிறந்த மலையாளத் திரைப்படமாக ’உள்ளொழுக்கு’, சிறந்த கன்னட திரைப்படமாக ’கண்டீலு’, சிறந்த இந்தி திரைப்படமாக, ‘கட்ஹல்’ ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.