பிரபாஸ் - ராணாவின் நடிப்பில், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமான வெற்றியை சந்தித்த திரைப்படம், பாகுபலி. இதன் முதல் பாகம் வெளிவந்து, இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஜூன் 10, 2015 ம் தேதி, இதன் முதலாம் பாகம் வெளியாகியிருந்தது.
பாகுபலி திரைப்படம், பிரபாஸின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். காரணம் அதுவரை தெலுங்கு, தமிழ் மொழிகளிலேயே அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்தது. பாகுபலி முதலாம் பாகம் வெளிவந்த பின்னர், இந்திய அளவில் அவருக்கு ரசிகர்கள் உருவாகினர். பிரபாஸின் முந்தைய படங்களைக்கூட தேடித்தேடி கொண்டாடினர் சில ரசிகர்கள்.
இந்தியா முழுக்க தனக்கு ரசிகர்கள் அதிகரித்ததை தொடர்ந்து, தனது படங்களை தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், இந்தி உட்பட இந்தியாவின் பல மொழிகளில் 'பான் இந்தியா' திரைப்படமாக வெளியிட்டு வந்தார் பிரபாஸ். கடைசியாக வெளியான அவரின் 'சாஹோ' இந்தியா முழுவதும் 'பான் இந்தியா' திரைப்படமாக வெளியானது. தற்போது நடித்து வரும் 'ராதே ஷ்யாம்', 'சலார்', 'ஆதிபுருஷ்' ஆகிய மூன்று படங்களும் கூட 'பான் இந்தியா' திரைப்படமாக தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த உச்சத்தின் மூலம், பிரபாஸின் சம்பளமும், 100 கோடியை தொடுமளவுக்கு உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இத்தனை பெருமைகளை தனக்கு சொந்தமாக்கிய பாகுபலி திரைப்படத்தை, இந்த தினத்தில் சமூக வலைதளம் வழியாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் பிரபாஸ்.
“#6YearsOfBaahubali:சினிமா மூலம் இந்திய அளவிலும் உலக அளவிலும் மிகப்பெரிய மகிழ்ச்சி அலையை ஏற்படுத்திய பாகுபலி திரைப்படத்தின் குழுவினருக்கானது, இப்பெருமை!” எனக்கூறி திரைப்படத்தில் வரும் சிவலிங்க சிலையை தூக்கும் காட்சியை பகிர்ந்துள்ளார் பிரபாஸ்.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான தர்மா மூவிஸ், “தனித்துவமாக கதைசொல்லி, காட்சியமைப்பின் மூலம் திரைகளை ஒளிரச்செய்த இத்திரைப்படம், இந்திய சினிமாவுக்கு தரப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பரிசு, மதிப்புமிக்க கிரீடம்” எனக்கூறி பெருமைப்பட்டுள்ளது.