ஆடு பலி கொடுத்த பாலய்யா ரசிகர்கள் எக்ஸ் தளம்
சினிமா

திருப்பதி: தியேட்டர் வாசலில் ஆடு வெட்டிய பாலய்யா ரசிகர்கள்... அதிரடி நடவடிக்கையில் காவல்துறை!

திருப்பதியில் தியேட்டரின் வெளியே ஆடு பலி கொடுத்த காரணத்திற்காக, நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் சிலர் மீது திருப்பதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

ஜெ.நிவேதா

திருப்பதியில் டாடா நகரிலுள்ள பிரதாப் என்ற தியேட்டரின் வெளியே ஆடு பலி கொடுத்த காரணத்திற்காக, நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் சிலர் மீது திருப்பதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரத்தில் ஐவர் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் பாலய்யாவின் (நந்தமூரி பாலகிருஷ்ணா) டக்கு மகாராஜ் திரைப்படம் சங்கராந்தியை ஒட்டி கடந்த வாரம் ஜனவரி 12ம் தேதியன்று வெளியானது. அதை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் சிலர், ஜனவரி 12ம் தேதி அதிகாலையிலேயே திரையரங்கு ஒன்றின் வெளியே ஆடு வெட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இதுகுறித்து அறிந்த PETA அமைப்பினர், அப்பகுதி காவல்துறையில் சம்பவம் குறித்து புகாரளித்துள்ளது.

அதன்கீழ் ‘ஆந்திராவில் விலங்குகள் மற்றும் பறவைகளை தடைசெய்யப்பட்ட வகையில் பலி கொடுப்பது’ மற்றும் ‘விலங்குகள் மீது வன்முறை தாக்குதலை நிகழ்த்துவது’ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு மட்டுமன்றி, இவ்விவகாரத்தில் ஐவர் கைதாகி இருப்பதாக திருப்பதி டிஎஸ்பி வெங்கட நாராயணா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “அதிகாலை 3:30 காலையில், நடிகர் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் பொது இடத்தில் ஆட்டை பலிகொடுத்துள்ளனர். இந்நிகழ்வு அங்கிருந்தோரால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. விசாரணையில் நாங்களும் இச்சம்பவத்தை உறுதிசெய்துள்ளோம்” என்றார். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் அவர்.