சினிமா

சென்னை சர்வதேச திரைப்பட விழா எங்கே?.. எப்போது? - திரையிடப்படும் தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ!

சங்கீதா

சென்னையில் நடைபெறும் 20-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள் உள்பட மொத்தம் 102 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வருகிற 15-ம் முதல் 22-ம் தேதி வரை 8 நாட்கள் இந்த சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. தமிழக அரசு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்படத்துறை ஆதரவுடன், ஃபிலிம் சொசைட்டி மற்றும் இந்தோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation - ICAF) இணைந்து வழங்கும் இந்த விழாவில் மொத்தம் 102 படங்கள் வெளியிடப்படுகின்றன. 51 நாடுகளில் இருந்து திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.

தமிழில் ‘ஆதார்’, ‘பிகினிங்’, ‘பபூன்’, ‘கார்கி’, ‘கோட்’, ‘இறுதி பக்கம்’, ‘இரவின் நிழல்’, ‘கசடதபற’, ‘மாமனிதன்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘ஓ2’, ‘யுத்த காண்டம்’ உள்ளிட்ட 12 படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியன் பனோரமா பிரிவில், ‘கடைசி விவசாயி’, ‘போத்தனூர் போஸ்ட் ஆபீஸ்’, ‘மாலை நேர மல்லிப்பூ’ உள்ளிட்ட தமிழ் படங்கள் உட்பட மலையாளம், பெங்காலி, ஒரியா, இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு என 15 படங்கள் திரையிடப்பட உள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு விருதுகளும் அறிவிக்கப்படும். சென்னை பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் மற்றும் அண்ணா திரையரங்கில் இந்தப் படங்கள் திரையிடப்பட உள்ளன.