’2.ஓ’ படத்தின் மேக்கிங் டீசருக்கு சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 15 மணி நேரத்தில் இரண்டரை மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘2.ஓ’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஜனவரி மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் மேக்கிங் டீசரை இயக்குனர் ஷங்கர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை வெளியிட்டார். 1.47 நிமிடம் மட்டுமே ஓடக் கூடிய இந்த மேக்கிங் டீசர் வெளியான அடுத்த நிமிடமே சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியது.
ஆன்லைனில் அமோக வரவேற்பை பெற்ற இந்த டீசர், வெளியான 15 மணி நேரத்துக்குள் இரண்டரை மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மேக்கிங் டீசர் ஒன்றுக்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. இந்த டீசரை கண்டு வியப்படைந்துள்ள நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.