சினிமா

''கேமரா நகரும் அல்லது நிற்கும்'' - 1917 திரைப்பட ஒளிப்பதிவாளருக்கு ஆஸ்கர் விருது!

''கேமரா நகரும் அல்லது நிற்கும்'' - 1917 திரைப்பட ஒளிப்பதிவாளருக்கு ஆஸ்கர் விருது!

webteam

92-வது ஆஸ்கர் விழாவில் 1917 திரைப்படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது டாய் ஸ்டோரி 4-க்கு வழங்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது ஹேர் லவ்-க்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது, 'Once upon a time in hollywood' படத்திற்காக பிராட் பிட்க்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருதையும், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதையும் கொரிய மொழியில் வெளியான Parasite திரைப்படம் வென்றது. பின்னணி இசைக்கான விருதை ஜோக்கர் திரைப்படத்திற்காக பெண் இசையமைப்பாளர் ஹில்டர் பெற்றார்.

இந்நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘1917’ திரைப்படம் ஒளிப்பதிவு, ஒலிக்கலவை, விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றது. 1917 படம் மொத்தம் 10 பிரிவுகளில் போட்டியிட்டாலும் இந்த குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளில் நிச்சயம் இந்தப் படம் விருதை வெல்லும் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அப்படி என்ன சிறப்பு இந்த திரைப்படத்தில்?

1917 திரைப்படத்தில் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ். இந்தப்படத்தின் ஒளிப்பதிவே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிக அளவில் கொண்டு வந்தது. முதல் உலகப்போர் நடந்தபோது 1600 வீரர்கள் தப்பிக்க இரு வீரர்கள் உதவுவதுபோல உருவாக்கப்பட்டுள்ள 1917 திரைப்படம் முழுவதும் ஒரே காட்சியாக நகர்வதுபோல காட்சியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது படத்தின் தொடக்கத்தில் நகரும் கேமரா நம் பார்வையில் நகர்ந்துகொண்டே இருக்கிறது. சில இடங்களில் ஒரே இடத்தில் நிற்கிறது. தொடந்து நகரும் உணர்வை தருவதால் 1917 திரைப்படம் ஒரு வித்தியாசமான உணர்வை தந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இப்படிப்பட்ட ஒளிப்பதிவை சாத்தியமாக்கிய ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸுக்கு நிச்சயம் ஆஸ்கர் கிடைக்கும் என்றும் பரவலாக கூறப்பட்டது. அதன்படியே ஆஸ்கர் வென்றுள்ளார் ரோஜர் டீக்கின்ஸ். அதேபோல் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என்ற பிரிவிலும் 1917 ஆஸ்கரை வென்றுள்ளது.

போர் தொடர்பான திரைப்படம் என்பதால் வெடிகுண்டு, போர் வீரர்களின் அலறல், அசம்பாவித சம்பவங்கள் என பல காட்சிகள் ஒலியின் வழியாகவும் ரசிகர்களை சென்றடைய முக்கிய காரணமாக இருந்தது ஒலிக்கலவை. படத்தின் ஆங்காங்கே மெளனம். திடீர் சத்தம் என ரசிகர்களை காட்சிக்குள் ஒன்றவைத்த ஒரு முக்கிய வேலையைச் செய்த ஒலிக்கலவைக்கும் ஆஸ்கர் கிடைத்துள்ளது.