சினிமா

'பொம்மரிலு' 14 ஆண்டுகள்: வீடியோ காலில் ’சித்தார்த் - ஜெனிலியா’

'பொம்மரிலு' 14 ஆண்டுகள்: வீடியோ காலில் ’சித்தார்த் - ஜெனிலியா’

sharpana

நடிகர் சித்தார்த், ஜெனிலியா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த ’பொம்மரிலு’ வெளியாகி 14 ஆண்டுகள் ஆகிறது. 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியான, இப்படம் பெரிய ஹிட் அடித்ததால் தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ் ஜெனிலியா, கெளசல்யா, சடகோபன் ரமேஷ் உள்ளிட்டவர்கள் நடித்த இப்படம், தமிழிலும் சூப்பர் ஹிட் ஆனது.

 பொம்மரிலு 14 வருடங்கள் கடந்தாலும் க்யூட் லூசுப்பெண் ஹாசினி தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார். இப்போதும், ஹாசினி போன்ற வெகுளியான பெண் கிடைக்கமாட்டாளா? என்றுதான் இளைஞர்கள் ஏங்குகிறார்கள். இந்நிலையில், பொம்மரிலு 14 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி,  ஜெனிலியா தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த்துடன் வீடியோ கால் வீடியோவைப் பகிர்ந்து பொம்மரிலு டீமை மிஸ் செய்வதாகப் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சித்தார்த் அடடா.. அடடா என்னை ஏனோ செய்கிறாய் பாடலை தெலுங்குவில் பாடுகிறார். பின்னணியில் பாடலும் ஒலிக்கிறது. ஜெனிலியாவும் வெட்கத்துடன் புன்னகைக்கிறார். மீண்டும் வந்த ஹாசினியின் க்யூட் வீடியோவுக்கு இன்ஸ்டாகிராமில் ஒன்பது லட்சம் லைக்ஸ்களும் 3500 கமெண்ட்ஸ்களுக்கு மேலும் பதிவாகியுள்ளது. டிவிட்டரிலும் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது.

நடிகை ஜெனிலியா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்துகொண்டார். அதிலிருந்து படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டர் தற்போது, பொம்மரிலு வீடியோவை பகிர்ந்து கொண்டிருப்பது ரசிகர்களிடையே உற்சாக மூட்டியிருக்கிறது. நடிகர் சித்தார்த்தும் ஜெனிலியாவும் இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.