நடிகர் ராணா, உடல் எடையை குறைத்து ஒல்லியாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகுபலி, ருத்ரமாதேவி, ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் ராணா. இந்தியிலும் நடித்து வருகிறார். பாகுபலி படத்துக்கு பிறகு இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் பெருகியுள்ளனர்.
இந்நிலையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விளம்பரத்துக்கான புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில், உடல் எடையை குறைத்து நம்ப முடியாதபடி ஒல்லியாக இருக்கிறார் ராணா.
இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவரிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கியுள்ளனர். ஒரு ரசிகர், ‘பல்வாள் தேவா, என்னாச்சு உடம்புக்கு? ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்கீங்க?’ என்று கேட்டுள்ளார். மற்றொருவர், ‘நோயாளி மாதிரி தெரியறீங்க... நல்லா இருக்கீங்கள்ல?’ என்று விசாரித்துள்ளார். ‘ஓ மை காட் என்னாச்சு, உங்களுக்கு?’ என்று ஒருவர் விசாரித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை நடந்ததாகவும் அதனால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. ’அது வெறும் வதந்திதான்’ என்று தெரிவித்திருந்தார் ராணா.
இந்நிலையில் இப்போது ஒல்லியாக இருப்பது போல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணா, ’விரதபர்வம் 1992’ என்ற தெலுங்கு படத்துக்காக உடல் எடையை குறைத்துள்ளார் என்று கூறப் படுகிறது.