சினிமா

வித்யா பாலனின் தீவிர ரசிகை நான்: ஜோதிகா ஓபன் டாக்

வித்யா பாலனின் தீவிர ரசிகை நான்: ஜோதிகா ஓபன் டாக்

webteam

‘துமாரி சுலு’ வித்யா பாலன் காதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடிப்பது உறுதியாகி உள்ளது. அதற்கான முறையான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த ‘துமாரி சுலு’ படத்தின் ரீமேக்கில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்தில் வித்யா பாலன் மிக சிறப்பாக நடித்திருந்தார். அவர் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கிய இந்தப் படம் காமெடி ரீதியாக பெரிதும் ரசிகர்களை ஈர்த்திருந்தது. 

இந்நிலையில் இப்படத்தை தமிழில் இயக்குநர் ராதா மோகன் இயக்க இருக்கிறார். இது குறித்து அவர், “ஹிந்தியில் வெற்றி பெற்ற ‘துமாரி சுலு’ படத்தை தமிழில் இயக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜோதிகாவுடன் ஏற்கெனவே ‘மொழி’ படத்தில் பணிபுரிந்திருக்கிறேன். அவருடன் மீண்டும் பணிபுரிய ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. யதார்த்த பாணியிலான இந்தக் கதையில் ஹிந்திக்கு இணையாக ஜோதிகா சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்துவார் என நம்புகிறென்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இதுகுறித்து பேசிய ஜோதிகா, “நான் வித்யா பாலனின் தீவிர ரசிகை. நான் அவரது படங்கள் எதையும் தவற விட்டதேயில்லை. அவரது குரல் எனக்குப் மிகவும் பிடிக்கும். அவரது உச்சரிப்புத் தொனி பாலிவுட்டில் அரிதான விஷயம். அவர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது ‘துமாரி சுலு’. வித்யா பாலன் நடித்த வேடத்தில் தமிழில் நான் நடிப்பது எனக்கான கெளரவமாக கருதுகிறேன்.” என கூறியுள்ளார்.

இப்படம் தமிழில் தயாராவது குறித்து தன் மகிழ்ச்சியை வித்யா பாலன் தெரிவித்துள்ளார். அதில், “ஒரு தமிழ்ப்பெண் என்ற முறையில் எனது படம் தமிழில் எடுக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. என்னைப் பொறுத்தவரை ‘துமாரி சுலு’ மறக்க முடியாத முக்கியமான ஒரு படம். ஜோதிகாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.