பழம்பெரும் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 88 . மறைந்த முக்தா சீனிவாசன் உடலுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், " திமுக தலைவர் கருணாநிதி நண்பர்களில் ஒருவர் முக்தா சீனிவாசன்" என்று புகழாரம் சூட்டி அஞ்சலி செய்தார்.தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "தேசப்பற்று மிகுந்தவர் முக்தா சீனிவாசன், தூய்மையான அரசியலை முன்னெடுத்தவர்" என்று புகழாரம் சூட்டினார். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், "நேருக்கு நேர் விமர்சிக்க உரிமை தந்தவர் முக்தா" என்று புகழாரம் சூட்டினார்.
கவிஞர் வைரமுத்து , "ஜனரஞ்சகமான கலைஞர் முக்தா" , பொதுவுடைமை சிந்தனைக் கொண்டவர்" என்றும் அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். பொதுமக்கள் அஞ்சலிக்காக தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முக்தா சீனிவாசனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.