சினிமா

’பாகுபலி’க்கு முன்பே ’சாஹோ’ ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது: இயக்குனர் சுஜீத் பேட்டி

webteam

பாகுபலி படத்துக்கு முன்பே ’சாஹோ’ படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது என்று அந்த படத்தின் இயக்குனர் சுஜீத் தெரிவித்துள்ளார்.

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ படங்களுக்காக, 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், அடுத்து நடிக்கும் படம், ’சாஹோ’. பிரமாண்ட ஆக்‌ஷன் படமான இதில் அவர் ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது.

 படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை அபுதாபியில் 60 நாட்களாக படமாக்கியுள்ளனர். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியது. அதன்படியே சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ஆக்‌ஷனில் மிரட்டி இருக்கிறது. இந்த டீசருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், ’பாகுபலி’ படத்துக்கு முன்பே ’சாஹோ’ ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது என்று இயக்குனர் சுஜீத் தெரிவித்துள்ளார்.

அவர் படம் பற்றி கூறும்போது, ’பிரபாஸ் போன்ற பெரிய ஹீரோவை இயக்குவதில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. அவர் என் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தார். தயாரிப்பாளர்களும் நம்பிக்கை வைத்தார்கள். அதனால் ஷூட்டிங்கை எளிதாக முடித்தேன். ரிலீஸுக்கு படம் ரெடியாகிவிட்டது. இப்போதுதான் எனக்கு அழுத்தம் அதிகரித்திருக்கிறது. ’பாகுபலி’ படத்துக்கு முன்பே இந்த கதை உருவாகிவிட்டது. பிரபாஸிடம் சொன்னதும் கண்டிப்பாக பண்ணலாம் என்றார். ’பாகுபலி’ ரிலீஸூக்காக காத்திருந்தேன். 

இந்தப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகமாகிறார் ஸ்ரத்தா கபூர். எனது படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக் கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். படத்தை இறுதி வரை கொண்டு செல்லும் கேரக்டரில் அவர் நடித்துள்ளார். இதில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. 2015 ஆம் வருடத்திலேயே ஆக்‌ஷன் இயக்குனர்களை சந்தித்து ஆலோசிக்கத் தொடங்கிவிட்டேன். அவர்கள் சில விஷயங்களை பரிந்துரைத்தார்கள். அதை கதைக்கு தேவையானபடி பயன்படுத்தி இருக்கிறேன்.

’டிரான்ஸ்பார்மர்ஸ்’ போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கென்னி பேட்ஸ், ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்துள்ளார். அவரோடு ’அசுரா’ போன்ற சீன படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்த பெங் ஷங்க்-கும் இதில் பணியாற்றியுள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும்’’ என்றார்.