சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 ஆம் தேதி மாநாடு படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் செக்க சிவந்த வானம். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். கேங்ஸ்டர் கதையை களமாக கொண்டிருந்த இப்படத்தில் அரவிந்த்சாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் சிம்பு தன் தனி ஸ்டைலில் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தளித்திருந்தார்.
இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாகத்தான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டியுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச் சென்றுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் சிம்பு கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மாநாடு படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்க சிம்பு பாங்காக் செல்ல உள்ளதாக தெரிகிறது. மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தின் நடிகை, இசையமைப்பாளர் யார் என்பது உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.