சினிமா

”இனிமேல் எனது படங்களில் மது, புகைப்பிடித்தல் காட்சிகளை தவிர்ப்பேன்”-இயக்குநர் வெற்றிமாறன்

webteam

மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் சினிமாவில் வருவது ஒரு பகுதிதான். சமூகத்தில் அதைவிட அதிகமாக பார்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இனிமேல் எனது படங்களில் இது போன்ற காட்சிகளை முடிந்தவரை தவிர்ப்பேன், இதற்கு முன்பும் தவிர்த்து வந்துள்ளேன் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் பிரசாந்த் மருத்துவமனை மற்றும் லயோலா கல்லூரி விஷூவல் கம்யூனிகேஷன் துறை இணைந்து நடத்திய ”இளம் இதயத்தை பாதுகாப்போம்” குறித்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று 100 மேற்பட்ட குறும்படங்கள் எடுத்தனர். இந்த குறும்பட போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

முதல் மூன்று இடங்களை பிடித்த டோபமைன் டெவில்ஸ், விழித்துக்கொள், லைஃப் ஸ்டைல் படங்கள் முறையே முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.50,000 மூன்றாம் பரிசு ரூ.25,000 என பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டது,

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”இதயம் பிறக்கும் முன்பு தொடங்கி இறக்கும் வரை இயங்கிக் கொண்டு இருக்கும் உறுப்பு. அதனை பாதுகாக்க வேண்டும், உடலை நல்ல வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் கல்லூரி படிக்கும் போதும், இயக்குநரான போதும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது‌. அது தவறானது என்று பின்னர் தான் உணர்ந்தேன். அதன் பிறகு மருத்துவர்களின் ஆலோசனைப்படி புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். அது மட்டும் இல்லாமல் நல்ல உணவுகளை உண்ணும் பழக்கத்தையும் மேற்கொண்டு வருகிறேன்.

நீங்களும் அதுபோல உடலையும், மனதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்த வரை சர்க்கரை பயன்படுத்தப்பட்ட உணவுகளை தவிருங்கள். சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. சரியான நேரத்துக்கு தூங்க வேண்டும், நல்ல உடல் நலத்துடன் இருப்பதினால் உடல் பாதிப்பு வராமல் இருக்கும் என்று கூற முடியாது. ஆனால் வந்தால் அதனை எதிர்கொள்ள இவைகளெல்லாம் உதவும்” என்று பேசினார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து பேட்டியளித்த வெற்றிமாறன், ”தற்போதைய சூழலில் இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. அதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளது. மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் சினிமாவில் வருவது ஒரு பகுதிதான். சமூகத்தில் அதைவிட அதிகமாக பார்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இனிமேல் எனது படங்களில் இது போன்ற காட்சிகளை முடிந்தவரை தவிர்ப்பேன். இதுவரை என்னுடைய படங்களில் கதாநாயகர்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்துள்ளேன்” என்று பேசினார்.