சினிமா

இனி கடவுளின் கையில்தான்... வெள்ளத்தில் சிக்கிய அனன்யா உருக்கம்!

webteam

’கடந்த 2 நாட்களாக நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல, அது கடுமையானது’ என்று நடிகை அனன்யா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக பலியானோர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வெள்ளப்பாதிப்புக்கு பிரபலங்களின் வீடுகளும் தப்பவில்லை. நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் காரில் செல்லும் போது நிலச்சரிவில் சிக்கினார். பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டர். திருவனந்தபுரத்தில் நடிகர் பிருத்விராஜின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியது. அவரது அம்மா, மல்லிகா சுகுமாறன் மிதவை மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் நடிகை அனன்யாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர், தமிழில், நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி உட்பட சில படங்களில் நடித்த மலையாள நடிகை. கடந்த 2012-ம் ஆண்டு ஆஞ்சநேயா என்பவரை திருமணம் செய்துகொண்ட அனன்யா, தற்போது கொச்சியில் வசித்து வருகிறார். இவர் வீடும் வெள்ளத்தில் சூழ்ந்துகொண்டது. 

இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கடந்த 2 நாட்களாக நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அது மோசமான அனுபவம். எங்கள் வீடு முழுவதுமாக தண்ணீருக்குள் முங்கிவிட்டது. நேற்று 11 மணிக்குத்தான் பத்திரமாக இருப்பதாக உணர்ந்தோம். நாங்கள் இப்போது பெரும்பாவூரில் உள்ள நடிகை ஆஷா சரத் (தமிழில், பாபநாசம் படத்தில் நடித்தவர்) வீட்டில் இருக்கிறோம். திடீரென்று தண்ணீரின் அளவு உயர்ந்து வீடு முங்கிவிட்டது. எங்கள் உறவினர்களின் வீடுகளும் தண்ணீருக்குள் முங்கிவிட்டது.

(ஆஷா சரத்)

இனி என்னவாகும் என்று தெரியவில்லை. இப்போதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. எல்லாம் கடவுளின் கையில்தான் இருக்கிறது. என்னை போல பலருக்கும் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். பெரும்பாவூர் டவுண் தவிர மற்ற இடங்களில் கடுமையாக மழை பெய்துகொண்டிருக்கிறது. எங்களை பாதுகாப்பாக மீட்டவர்களுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.