சினிமா

“புற்றுநோயாளிகள் முடங்கிவிடாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும்” - மனிஷா கொய்ராலா

webteam

இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 17 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை (2019) கூறுகிறது. இருந்தும் இந்தியாவில் 50% புற்றுநோயாளிகள் நோய் குணமாகி வாழ்ந்து வருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அவ்வாறு இந்த நோயால் பதிக்கப்பட்டு குணமடைந்தவர்தான் திரைப்பட நடிகை மனிஷா கொய்ராலா.

அவர் புற்றுநோயால் அவதிப்பட்டது முதல் குணமடைந்து மீண்டது வரையான அனுபவத்தை ‘யுவர்ஸ்டோரி’க்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார். தனக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது மனிஷா கொய்ராலா ஒரு விஷயத்தை முடிவு செய்திருக்கிறார்.  அப்படி என்ன நினைத்தார். அவரே சொல்கிறார். “2012ல் எனக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் கதைகளை தேடினேன். ஆனால் புற்றுநோயால் பாதிப்படைந்தவர்கள் அந்த அனுபவத்தை பரிமாறுவதில்லை என்று தெரிந்துகொண்டேன். ஆகவே அன்று நான் முடிவு செய்தேன், புற்றுநோய் குணமடைந்தவுடன் என் கதையை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று. அதனால்தான் என் அனுபவத்தை புத்தகமாக எழுதினேன்” என்கிறார். 

புற்றுநோயை கையாள்வது பற்றி மனிஷா கொய்ராலா, “ஒருமுறை புற்றுநோய் வந்துவிட்டால் அது பெரிய மன அழுத்ததை உண்டாக்கும். அதிலிருந்து மிள்வது கடினமாக இருந்தாலும் நாம் அதிலிருந்து வெளிவர முயலவேண்டும். புற்றுநோய் குணமடைந்தாலும் அது முன்று ஆண்டுகளில் திரும்பி வரலாம் என்பதால் குணமடைந்த பின்பும் மன நிம்மதி இருக்காது.

புற்றுநோய் வந்துவிட்டால் இறப்பு நெருங்கிவிட்டதாக நினைக்கவேண்டாம். முறையான சிகிச்சையும் நம்பிக்கையும் இருந்தால் நாம் குணமடைவது நிச்சயம் உறுதி” எனத் தெரிவித்தார்.

மேலும் “புற்றுநோய் மருத்துவரின் ஆலோசனையை கவனமாக கேட்டு நடக்கவேண்டும். நம் உடலில் உள்ள புற்றுநோயை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும். நம் உண்ணும் உணவு ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். அதேபோல, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முடங்கிவிடாமல் சரியான உடற்பயிற்சி செய்யவேண்டும். அதாவது யோகா,தியானம் போன்றவற்றை செய்வதால் மன அழுத்தும் குறையும்” எனத் தெரிவித்தார்.