சினிமா

”அன்று இலங்கை இன்று சிரியா” நடிகர் விவேக் பதிவிட்ட ட்வீட்

webteam

”சிரியாவில் சாவது குழந்தைகள் மட்டுமா? மனிதமும் தான்” மன வருத்தத்துடன் நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் தொடங்கிய சண்டை இன்று வரை ஓயவில்லை. இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்களின் கிழக்கு கூட்டா பகுதி மீது அதிபர் ஆதரவு படை நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் எந்தப் பாவமும் அறியாத குழந்தைகள். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.

இப்போது போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தப்போதிலும், அது எந்த அளவிற்கு பலன் கொடுக்கும் என்பது கேள்வியாகவே உள்ளது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வரும் என்றும் தெரியவில்லை.

இதுகுறித்து பிரபலங்களும் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், சிரியா  சம்பவம் குறித்து பதிவு செய்துள்ளார். அதில், ”பிஞ்சுக் குழந்தைகளின் கண்ணீரும் ரத்தமும் நெஞ்சு பிளக்கிரதே. அன்று இலங்கை இன்று சிரியா. சாவது குழந்தைகள் மட்டுமா? மனிதமும் தான்” என அவர் பதிவிட்டுள்ளார்.