சினிமா

அசராமல் துரத்தும் AAA பட பிரச்னை: சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்கு சிக்கலும் பின்னணியும்

நிவேதா ஜெகராஜா

சிலம்பரசன் நடிப்பில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தை தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்று வருகிறது.

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைக்கேல் ராயப்பன் தயாரித்த திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. 2017-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் கடுமையான நஷ்டத்தை சந்தித்தது. மேலும், படத்தின் தோல்விக்கு சிம்புதான் காரணம் என்றும், திட்டமிட்டபடி அவர் படப்பிடிப்புக்கு வராததால் படத்தின் பட்ஜெட் உயர்ந்ததாகவும் தயாரிப்பாளர் குற்றம்சாட்டினார்.

அத்துடன், இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்தார். அதேசமயம் 2 பாகங்களாக உருவாக வேண்டிய படத்தை பாதியுடன் நிறுத்தி, இதை மட்டும் வெளியிடலாம் என்று சிம்பு கூறினார் எனவும், அதில் ஏற்படும் நஷ்டத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்து நடித்து கொடுக்கிறேன் எனவும் தெரிவித்ததாக சங்கத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்தார். ஆனால், சிம்புவின் இந்த புதிய முடிவுக்கு முறைபடி ஒப்பந்தம் கையெழுத்திடாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே 'AAA' படத்தை வெளியிட தயாரிப்பாளர் சம்மதித்தார் என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிம்புவிடம் நஷ்டத்தை திரும்பப் பெறும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சிம்பு தரப்பில் அவரின் தாயார் உஷா கலந்துகொண்டார். தங்கள் தரப்பில் முறையாகவே அனைத்தும் நடைபெற்றதாக கூறினார். இருந்தாலும் இரு தரப்பையும் விசாரித்த சங்க நிர்வாகிகள், சிம்புவின் ஒவ்வொரு படத்திலும் குறிப்பிட்ட தொகையை மைக்கேல் ராயப்பனுக்கு வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டனர். ஆனால், ஒப்பந்தப்படி சிம்பு தரப்பினர் நடந்துகொள்ளவில்லை என்று மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இறுதியாக, சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்' படம் வரை இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இதேபோல், மேலும் நான்கு தயாரிப்பாளர்கள், சிம்பு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர். சிம்பு மீது பல்வேறு புகார்கள் சங்கத்தில் உள்ளதால், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் 'நதிகளில் நீராடும் சூரியன்' படத்திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் சிம்பு தரப்பில் உஷாவிற்கும் கடந்த 2-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

மைக்கேல் ராயப்பனுக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக கொடுப்பதுடன், அனைத்து தயாரிப்பளர்களின் பிரச்னையையும் முடித்துக் கொடுத்தால் மட்டுமே சிம்புவின் படத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் நடிகர் சிம்புவிற்கும், அவரை வைத்து படம் தயாரிக்க திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கும் தற்போது பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதை சுமுகமாக முடிக்க பல தரப்பிலிருந்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

- செந்தில் ராஜா