சினிமா

’’நேர்மறை அரசியல் உருவாகும் என்றால் அது என் குரு சூப்பர் ஸ்டாரால்தான்’’ - ராகவா லாரன்ஸ்

Sinekadhara

நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் சினிமா தவிர அவரது பல நல்ல சேவைகளையும் செய்து வருகிறார். அவரை அரசியலுக்கு வரவேண்டும் என்று பலர் கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு பதில் தெரிவித்து அவர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த மாதம் அரசியலில் இறங்காமலும் நம்மால் சேவை செய்யமுடியும் என பதிவிட்டிருந்தேன். ஆனால் அதற்குபிறகு அரசியலுக்கு வந்தால் இன்னும் சிறப்பான சேவை செய்யலாம் என்று பலர் என்னிடம் கூறினர். அதிலும் கொரோனா மீட்புப் பணிகளில் ஈடுபட்டபிறகு இந்த அழுத்தம் மிகவும் அதிகமாகிவிட்டது. நான் ஒரு சாதாரண மனிதனாக குழந்தைகளுக்கு ஆஸ்ரமம் தொடங்கி சேவை செய்ய ஆரம்பித்தேன். தேவை இருந்தபோதெல்லாம் அரசாங்கம் மற்றும் பலரிடம் உதவிகளைக் கோரியுள்ளேன். கலைஞர் ஐயா, ஸ்டாலின் சார், அன்புமணி ராமதாஸ் சார், ஜெயலலிதா அம்மா, எடப்பாடி பழனிச்சாமி ஐயா, பன்னீர்செல்வம் சார், விஜய பாஸ்கர் சார் போன்ற பலரும் என்னுடைய சேவைக்கு ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர்.

ஒரு தனிமனிதனாக அரசியலில் இறங்கலாம். ஆனால் என் அம்மா சொல்வதைப்போல் எப்போதும் நேர்மறையான அரசியல் என்பது சாத்தியமில்லை. ஒருவரைப் பற்றி ஒருவர் பேசவேண்டி இருக்கும். யாரையும் புண்படுத்தாத அரசியல் ஒன்று இருந்தால் கட்டாயம் நான் அதில் இணைந்து செயல்படுவேன்.

அப்படி ஒரு அரசியலை உருவாக்க முடியும் என்றால் அது என் குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால்தான் முடியும். அவர் யாரையும் எதற்காகவும் காயப்படுத்தி நான் பார்த்ததில்லை. என் தலைவர் ஆன்மீக அரசியலை ஆரம்பித்த பிறகு அவருடன் இணைந்து அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நானும் என்னால் ஆன சிறந்ததை சமூகத்திற்கு செய்வேன்’’ என்று கூறியுள்ளார்.