’கே.ஜி.எஃப் 2’ படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி தனது பண்ணை வீட்டிலுள்ள நிலத்தில் விவசாயம் செய்வதற்காக சிறிய நீர்நிலையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் நடிகர் யஷ்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. இந்த வெற்றியால், ’கேஜிஎஃப் 2’ அடுத்தப் பாகத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
டீசர் வெளியாகி பல்வேறு சாதனைகளை ஒரே நாளில் நிகழ்த்தியது. வரும் ஜூலை 16 ஆம் தேதி ’கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது. இதனால், இப்படத்தின் ரசிகர்கள் வேற லெவல் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், ’கேஜிஎஃப் 2’ படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து யஷ் ரிலாக்ஸாக கர்நாடக மாநிலம் ஹசனில் உள்ள தனது பண்ணை வீட்டில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச சிறிய நீர்நிலையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். புல்டோசர் நிலத்தை சமன்படுத்தும் பணிகளை யஷ் பார்வையிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயம், அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கடந்தமாதம் யஷ் குடும்பம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.