தான் ஒரு நடிகராக பல மைல் தூரம் செல்ல இருப்பதால், அரசியலில் நுழைய தயாராக இல்லை என நடிகர் சோனு சூட் கூறியிருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகர் கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவிப்பவர்களுக்கு பல்வேறு போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு கொடுப்பதோடு, வேறு பல உதவிகளையும் செய்துவருகிறார். சினிமாக்களில் வில்லனாக தோன்றினாலும் நிஜ வாழ்க்கையில் பலருக்கு ஹீரோவாக மாறியுள்ளார்.
பிங்க்வில்லாவில் அவர் பேட்டியளித்தபோது அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற நடிகை நேகா துபியாவின் கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அதில் ’’கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு அரசியலில் சேர நிறைய வாய்ப்புகள் வருகின்றன. நீங்கள் சிறந்த தலைவராக இருப்பீர்கள் என்று என்னிடம் பலர் கூறியுள்ளளனர். ஆனால் ஒரு நடிகராக நான் பல மைல் தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. ஒருவரால் அரசியலுக்கு எப்போது வேண்டுமானாலும் வரமுடியும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணிக்க விரும்பும் ஆள் நான் அல்ல’’ என்று சோனு சூட் கூறியுள்ளார்.
மேலும், ’’நான் அரசியலில் இறங்கினால் 100 சதவீதம் முழுமையாக வேலைசெய்வேன். யாருக்கும் எந்த பிரச்னை இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பிரச்னைகளைத் தீர்க்க நேரத்தை செலவிடுவேன். அதனால் இப்போது அதற்கு நான் தயாராக இல்லை என்று நினைக்கிறேன். மேலும் இதுகுறித்து யாருக்கும் எந்த கட்சிக்கும் பதிலளிக்க விரும்பவில்லை. அது என் சுயவிருப்பம்’’ என்றும் கூறியுள்ளார்.