சினிமா

பேய் கதைகளை தேடி திரியவில்லை: அஞ்சலி

பேய் கதைகளை தேடி திரியவில்லை: அஞ்சலி

webteam

பேய் கதைகளை தேடி தான் திரியவில்லை என்றும், நல்ல கதைகளை மட்டுமே தேடிக் கொண்டிருக்கிறேன் என்றும் நடிகை அஞ்சலி கூறியிருக்கிறார்.

செய்தியாளர்களை சந்தித்த அஞ்சலி, “2017 ஆம் பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். ஆனால் அந்தப் படங்களின் வேலைகள் வெவ்வேறு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் சில படங்கள் வெளி வந்துள்ளன. அதேபோல பலூன் வெளிவர இருக்கிறது. அது இரு மொழி திரைப்படம். மலையாளத்தில் மம்முட்டி உடன் நடிக்கிறேன். பிஜு மேனனின் ரோசாப்பூவில் நடித்துள்ளேன். தமிழில் சில படங்கள் வெளிவர உள்ளன. எனக்கு படங்களின் பட்டியல் முக்கியமல்ல. என்னை பார்க்கும் ரசிகர்கள் நான் நல்ல ஸ்கிரிப்ட்டில் நடிப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் மனதில் நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், பேய் படங்களை விரும்பி தேர்வு செய்கிறீர்கள் போல? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நான் பேய் படங்களாக இருக்கிறதா என்று பார்த்து கதையை தேர்வு செய்வதில்லை. நான் நல்ல கதையாக இருக்கிறதா என்று பார்த்துதான் படங்களை தேர்வு செய்கிறேன். நான் கேட்கும்போது அந்த திரைக்கதை உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். எனக்கு அதில் நடிப்பதற்கான ஸ்கோப் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் சட்டென்று அந்தக் கதையை தேர்வு செய்துவிடுவேன். என்னிடம் கதை சொல்பவர்கள் மொத்த திரைக்கதையையும் ஒரு புத்தகமாக கொடுக்க வேண்டும். அதை நான் உன்னிப்பாக படிப்பேன். படிக்கும்போதுதான் ஒரு கதையை உள்வாங்கிக் கொள்ள முடியும். கதை உள்வாங்கும்போதே ஒரு உணர்வு உண்டாகும். அந்த உணர்வு கிடைத்துவிட்டால் அதில் நடிக்க சம்மதித்திடுவேன். என்னிடம் இப்போதைக்கு இரண்டு பேய் படங்கள்தான் உள்ளன. அது ஒவ்வொன்றாக வெளியே வரும்” என அஞ்சலி கூறியிருக்கிறார்.