சுந்தர் சி இயக்கும் படத்தில் சிம்புவின் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் பவண் கல்யாண் நடித்த திரைப்படம் ‘அத்தாரின்டிகி தாரேதி’. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் திங்கள் கிழமை தொடங்கியது. இந்தப் படப்பிடிப்பில் சிம்பு இம்மாத இறுதியில்தான் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு இன்னும் முறையாக தலைப்பு வைக்கப்படவில்லை.
சிம்புவிற்கு ஜோடியாக மோகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியும் படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுந்தர் சி.யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இதற்கு இசையமைக்க உள்ளார். படத்தை லைகா தயாரிக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் சிம்பு இடம்பெற்றுள்ள தோற்றத்திற்கு உண்டான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் சிம்பு குறுந்தாடியுடன் மிக இளமையாக காட்சி தருகிறார். அந்தப் படங்களை அவரது ரசிகர்கள் உற்சாகமாக எடுத்து போட்டு கருத்திட்டு வருகிறார்கள்.