வணிகம்

'ஜொமோட்டோ' ஐபிஓ-வுக்கு செபி ஒப்புதல்: இது 'முக்கியத்துவம்' பெறுவதன் பின்புலம்

'ஜொமோட்டோ' ஐபிஓ-வுக்கு செபி ஒப்புதல்: இது 'முக்கியத்துவம்' பெறுவதன் பின்புலம்

நிவேதா ஜெகராஜா

உணவு விற்பனை செய்யும் செயலியான 'ஜொமோட்டோ'வின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு செபி ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் எப்போது வெளியாகும் என்னும் தகவல் வெளியாகலாம். 

இந்த நிறுவனத்தில் இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் 18.55 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் 750 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு 375 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மற்ற முதலீட்டாளர்கள் ஐபிஒ மூலம் வெளியேறவில்லை. சீனாவை சேர்ந்த ஆண்ட் குரூப் இந்த நிறுவனத்தில் கணிசமாக முதலீடு செய்திருக்கிறது. தவிர, டைகர் குளோபல் உள்ளிட்ட சில நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.

ஐபிஓவுக்கு பிறகு நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.50000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

சமீப காலமாக பல நிறுவனங்களின் ஐபிஓ வெளியாகி வருகின்றன. இருந்தாலும் ஜொமோட்டோ ஐபிஓ முக்கியமானது. காரணம், இவையெல்லாம் புதுயுக தொழில்கள் ஆகும். இந்த நிறுவனத்தின் வெற்றியை பொறுத்து பல நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளன. ஏற்கெனவே பேடிஎம் நிறுவனம் ஐபிஓவுக்கு விண்ணப்பிக்க இருக்கிறது.

தவிர பாலிசி பஜார், நய்கா, டெலிவெரி உள்ளிட்ட நிறுவனங்களும் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுவருகின்றன. அதேபோல ஃபிளிப்கார்ட் மற்றும் பிரெஷ் வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்க பங்குச்சந்தையில் ஐபிஓ கொண்டுவர திட்டமிட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் குரோசரி நிறுவனமான குரோபர்ஸில் ஜொமோட்டோ முதலீடு செய்தது. 9.3 சதவீத பங்குகளை வாங்கியது. இந்த முதலீடு மூலம் குரோபர்ஸ் நிறுவனமும் யுனிகார்ன் (100 கோடி டாலர் சந்தை மதிப்பு) பட்டியலில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.