வணிகம்

"எங்களின் 91% கடன்களை அடைத்துவிட்டோம்" - 'ஜீ குழுமம்' சுபாஷ் சந்திரா

நிவேதா ஜெகராஜா

கடன்களால் பாதிக்கப்பட்ட குழுமங்களில் ஜீ குழுமமும் ஒன்று. கடந்த இரு ஆண்டுகளாக கஷ்டபட்ட இந்தக் குழுமம், தற்போது 91.2 சதவீத கடன்களை அடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜீ குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா கூறும்போது, "43 நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் 88.3 சதவீத தொகையை செலுத்திவிட்டோம். 2.9 சதவீத தொகையை செலுத்துவதற்கான பணியில் இருக்கிறோம். மொத்தம் 91.2 சதவீத தொகை செலுத்தப்பட்டுவிடும். மீதமுள்ள 8 சதவீத தொகை நடப்பு நிதி ஆண்டுக்குள் அல்லது அதற்கு முன்பாக கூட செலுத்திவிடுவோம்.

2019-ம் ஆண்டு எழுதிய கடிதத்தில் 18 மாதங்களுக்குள் இந்தப் பிரச்னையை சரிசெய்வோம் என கூறியிருந்தேன். ஆனால், கோவிட் காரணமாக 30 மாதங்களாக நீண்டுவிட்டது" என்றார்.

ஜீ குழுமத்தின் கடன்களை அடைப்பதற்காக, தனிப்பட்ட முறையில் உள்ள சொத்துகளையும் சுபாஷ் சந்திரா விற்றிருக்கிறார். இதனால் எந்த வருத்தமும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

"என்னுடைய சகோதரர் ஜவகர் கோயல் நிறுவனமான டிஷ் டிவியும் என்னால் கடும் நெருக்கடியை சந்தித்தது. அதற்காக பொதுவெளியில் அவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

"எங்களுக்கு வீடியோ தொழிலில் அனுபவம் உள்ளது. அதனால், டிஜிட்டல் வீடியோ தொழிலில் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.