வணிகம்

''மே19-க்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை சரசரவென்று ஏறலாம்'' - என்ன காரணம்?

''மே19-க்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை சரசரவென்று ஏறலாம்'' - என்ன காரணம்?

webteam

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை அமெரிக்கா கடந்த ஆண்டு வலியுறுத்தியது. ஆனால் இறக்குமதியை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவகாசம் கேட்டதால் தடைக்கான கெடுவை மே 2ம் தேதி வரை அமெரிக்கா நீட்டித்தது. இந்நிலையில் அமெரிக்கா விதித்த காலக்கெடு முடிந்துவிட்டது. தற்போது  இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதால் அமெரிக்கா சற்று அமைதி காப்பதாக தெரிகிறது. இந்நிலையில் மே19க்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவை பொறுத்தவரை கச்சா எண்ணெய் இறக்குமதியானது 2015-16ம் ஆண்டுகளில் 80.6 சதவிகிதமாக இருந்தது. அதாவது 202.9 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. அடுத்த 3 ஆண்டுகளில் 226.6 மில்லியன் டன்னாக இறக்குமதி அதிகரித்தது. ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு ஒவ்வொரு வருடமும் வேறுபடுகிறது. 2018-19-ம் ஆண்டுகளில் 114.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. அதில் 10.6% ஈரானிடம் இருந்து இறக்குமதியானவை. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியா மிகப்பெரிய சந்தையாகவே இருக்கிறது. 

இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு 4% குறைந்தாலே பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்திக்க வேண்டிவரும் என்பது தான் தற்போதைய நிலை. ஏற்கெனவே கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 52.40 டாலராக இருந்தது. அது தற்போது 70.70 டாலராக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை சரசரவென்று அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றம் கொண்டுவரப்பட்டால் அது தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. அதனால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாமல் இருக்கிறது என்றும், மே 19க்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் வில்புல் ரோஸ், இறக்குமதி தொடர்பான சில முடிவுகளை இந்தியாவில் புதிய அரசின் ஆட்சி தொடங்கியதும் எடுப்போம் என தெரிவித்துள்ளார். எனவே, மே மாத இறுதியில் இருந்து கச்சா எண்ணெய் நிலைப்பாட்டில் இந்தியா எடுக்கும் முடிவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.