வணிகம்

மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்களில் இல்லாத உயர்வு

Sinekadhara

நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் 4 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி மார்ச்சில் பணவீக்கம் 14.55 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு மொத்த விலை பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது.

உக்ரைன் போர் எதிரொலியாக பல்வேறு பொருட்களின் விற்பனை சங்கிலி பாதிக்கப்பட்டு அவற்றின் விலை உயர்ந்ததாகவும், இதுவே பணவீக்க அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது என புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தவிலை பணவீக்கம் தொடர்ந்து 12ஆவது வாரமாக இரட்டை இலக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கமும் 6.95 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

இதனிடையே பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. கோவிட் தாக்கத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரிப்பதை தவிர்த்து வருகிறது. வளர்ச்சியை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி வட்டிவிகிதங்களை குறைந்த அளவிலேயே கட்டுப்படுத்தி வருகிறது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால், குறைந்த வட்டி விகித கொள்கை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் உள்ளிட்ட முக்கிய தினசரி பயன்பாடு பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், பணவீக்கம் 14.55% ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. சென்ற வருடம் மார்ச் மாதத்தில் மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் 7.89% சதவிகிதமாக இருந்தது. இந்த பணவீக்க அதிகரிப்புக்கு, ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகளால் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தாது எண்ணெய்கள், அடிப்படை உலோகங்களின் விலை அதிகரித்ததே காரணமாகும் என மத்திய அரசு கருதுகிறது. சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கமும் 8 சதவிகிதம் என்கிற அளவில் அதிகமாகவே இருந்து வருகிறது.

தொழில் ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம், இந்தியாவிற்கான மொத்த விலை குறியீட்டு அட்டவணை எண்ணை வெளியிட்டுள்ளது. இந்த தற்காலிக விலை குறியீட்டு விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி (அல்லது) அடுத்த வேலை நாளில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.