வணிகம்

"கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும்" - ரஷ்யா விடுத்த எச்சரிக்கை

Veeramani

மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் உலகளவில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 300 டாலராக உயரலாம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர்  அலெக்சாண்டர் நோவக், "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பது உலகளாவிய சந்தையில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் விலை இருமடங்காக அதிகரித்து கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 300 டாலராக உயரலாம். மேலும் ஜெர்மனிக்கான முக்கிய எரிவாயு குழாய் திட்டமும் மூடப்படும்" என்று கூறினார்.



உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக இதுவரை 17 லட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய அகதிகள் வெளியேற்ற நிகழ்வு இதுவாகும்.  எனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறியது.

ஏற்கெனவே உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை 2008-க்குப் பிறகு மிக உயர்ந்த அளவிற்கு உயர்ந்தது. உலகளவில் எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளில் முக்கியமானதாக ரஷ்யா உள்ளது, எனவே உலகின் பல நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய் வளத்தை நம்பியுள்ளன.