வணிகம்

"கிராமப்புற இளைஞர்களை சி.இ.ஓ.-க்களாக வளர்த்தெடுப்பீர்" - ஜகி வாசுதேவ் வலியுறுத்தல்

நிவேதா ஜெகராஜா

"வேலை தேடி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்க, கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அங்குள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களாக வளர்த்தெடுக்க வேண்டும்" என்று வர்த்தக தலைவர்களிடம் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் வலியுறுத்தினார்.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட தகவல்: ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் 'Human is not a Resource' என்ற வருடாந்திர கருத்தரங்கு இணையம் வாயிலாக நடைபெற்றது. இதில் 11 நாடுகளைச் சேர்ந்த 150 வர்த்தக தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த வர்த்தக கலந்துரையாடலில் ஜகி வாசுதேவ் பேசும்போது, "உலகம் முழுவதும் உள்ள தொழில் முதலீடுகளில் பெரும் பகுதி 25 முதல் 30 முக்கிய நகரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. இதனால், 160 கோடி (1.6 பில்லியன்) மக்கள் வேலை வாய்ப்பிற்காக நகரங்களுக்கு இடம்பெயர வேண்டியுள்ளது.

மக்கள் எங்கு வாழ்கிறார்களோ, அங்குதான் தொழில் வளர்ச்சி நடக்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்காக மக்களை இடம்பெயர செய்வது சரியான முறை அல்ல. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்புகளை அதிகளவு உருவாக்க வேண்டும். அதற்கு, நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் குறைந்தப்பட்சம் 10 முதல் 15 சதவீதத்தையாவது கிராமங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

தொழில் துறையின் தேவைக்கேற்ப அந்தந்த கிராமங்களில் உங்கள் நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்குள் மறைந்து இருக்கும் திறமைகளை கண்டறிருந்து உங்கள் நிறுவனத்தின் சி.இ.ஓக்களாக உயரும் அளவிற்கு அவர்களை வளர்தெடுக்க வேண்டும். மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் மனித தன்மை கொண்ட இதுபோன்ற அம்சங்கள் மிகவும் அவசியம்" என்றார் ஜகி வாசுதேவ்.