வணிகம்

அமலாக்கத்துறை முடக்கிய விவோவின் வங்கி கணக்கை விடுத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

webteam

கடந்த வாரத்தில் விவோ நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விவோ நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 50 சதவீதம் அளவுக்கு முறைகேடாக சீனாவுக்கு அனுப்பபட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அமலாக்கத்துறை விவோ நிறுவனத்தின் பல வங்கி கணக்குகளை முடக்கியது. வங்கி கணக்கை முடக்கியதால் தொழிலை நடத்த முடியவில்லை என்றும் இதனால் தொழில் பாதிப்படைந்திருப்பதாகவும் உயர்நீதிமன்றத்தை நாடியது.

பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை, விற்பனையாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கிறது. வங்கியில் பணம் இருக்கிறது. இருந்தாலும் சம்பளம் கொடுக்கமுடியவில்லை என்றால் இதுவும் சட்டத்துக்கு எதிராகவே கருதப்படும். பலர் பாதிப்படைந்திருப்பதால் வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என விவோ கோரிக்கை விடுத்தது.

சில நிபந்தனைகளுடன் வங்கி கணக்கை பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 950 கோடி ரூபாய் அளவுக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதேபோல குறைந்தபட்சம் 250 கோடி ரூபாயை கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஒரு வாரகாலத்தில் அமலாகத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கை ஜூலை 28-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.