கடந்த ஜூலை மாதம் வாகன விற்பனை சிறப்பாக இருந்தது. பெரும்பாலான நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1.01 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்த சூழலில் தற்போது 1.41 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதியின் ஜூலை மாத விற்பனை 39 சதவீதம் அளவுக்கு உயரந்திருக்கிறது. மாருதியின் முக்கியமான பிராண்ட்களான வேகன் ஆர், ஆல்டோ, ஸ்விப்ட் உள்ளிட்ட பல மாடல்களின் விற்பனையில் வளர்ச்சி இருக்கிறது. மற்றொரு முக்கிய நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் ஜூலை மாதம் விற்பனை 26 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலையில் 38,200 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில், தற்போது 48,042 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அல்கசார், கிரெட்டா, ஐ20 மற்றும் வென்யூ ஆகிய மாடல்களின் விற்பனை ஏற்றத்தில் இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் ஜூலை மாதத்தில் இரு மடங்கு அளவுக்கு வளர்ச்சி இருக்கிறது. கடந்த ஆண்டு 15,012 யூனிட்கள் விற்பனையாகி இருந்த சூழலில், தற்போது 30,185 வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. எம்ஜி நிறுவனத்தின் விற்பனையும் இரு மடங்கு அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,105 ஆக இருந்த விற்பனை தற்போது 4225 ஆக இருக்கிறது. ஹோண்டா கார்ஸ் விற்பனை 12 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதேபோல மற்ற நிறுவனங்களின் விற்பனையும் உயர்ந்திருக்கின்றன.