வணிகம்

அமெரிக்காவின் அச்சுறுத்தல் : சீன சிப் நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி

அமெரிக்காவின் அச்சுறுத்தல் : சீன சிப் நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி

webteam

சீன சிப் நிறுவனமான எஸ்எம்ஐசி-யின் பங்குகள் அமெரிக்காவின் தடை அச்சுறுத்தலால் கடும் வீழ்ச்சி கண்டுள்ளன.

கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிப் தயாரிப்பு நிறுவனம் எஸ்எம்ஐசி எனப்படும் செமிகான்டக்டர் மேனுஃபேக்ஜரிங் இண்டர்நேஷனல் கார்ப்ரேஷன். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சீனாவின் ஷாங்காயில் உள்ளது. உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் எம்எம்ஐசி-யின் சிப்கள் அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், தைவான் என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிறுவனத்தின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கவுள்ளதாக அமெரிக்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின. அத்துடன் இந்நிறுவனத்தின் சிப்களுக்கு அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்த தகவலின் எதிரொலியாக ஆசிய சந்தைகளில் எம்எம்ஐசி சிப் நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டன. நேற்று மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள் ஹாங்காங்கில் 23%, ஷாங்காயில் 11% வீழ்ச்சியடைந்தன. அதுமட்டுமின்றி தைவான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இதன் பங்குகள் வீழ்ந்துள்ளன.

அமெரிக்கா தங்கள் நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் வைக்க முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தங்களுக்கு அதிர்ச்சியாகவும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக எஸ்எம்ஐசி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.