வாகன உற்பத்தி தொழில் சார்ந்த ஏற்றுமதிக்கு சென்னை துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கு லாரிகளை, சென்னை துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்திற்கு எடுத்துச் செல்லும் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. அதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை துறைமுகத் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கப்பல் சேவையைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய கட்கரி, கடல்வழிச் சேவையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்றும், போக்குவரத்து செலவு குறையும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இந்தியா, வங்கதேசம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 185 சரக்கு லாரிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை, தெற்கு ஆசிய நாடுகளுக்கு 12 ஆயிரம் சரக்கு லாரிகள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.