வணிகம்

"கிரிப்டோகரன்சி வருவாயை குறிப்பிட ஐடி படிவத்தில் தனிப்பிரிவு" - மத்திய அரசு

Sinekadhara

அடுத்த நிதியாண்டு முதல் வருமான வரிக்கணக்கு தாக்கல் படிவங்களில் கிரிப்டோகரன்சி வருவாயை குறிப்பிட தனிப்பிரிவு இடம் பெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் இதை தெரிவித்துள்ளார். கிரிப்டோகரன்சிகளுக்கு புதிதாக வரி விதிக்கப்படவில்லை என்றும், அவையும் வரி விதிப்புக்கு உட்பட்டதுதான் என்று மட்டுமே பட்ஜெட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறை செயலாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிதி மசோதாவில் கிரிப்டோகரன்சி இடம்பெற்ற நிலையில் அதை வைத்து அவ்வகை பணங்களுக்கு சட்ட அங்கீகாரம் உண்டா, இல்லையா என எந்த முடிவுக்கும் வரக்கூடாது எனவும் தருண் பஜாஜ் விளக்கினார்.

கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து சட்ட மசோதா ஒன்றை மத்திய அரசு உருவாக்கிவரும் நிலையில் அது குறித்த வரைவு அறிக்கை எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதிக்கும் பட்ஜெட் அறிவிப்பால் அவற்றுக்கு மத்திய அரசு சட்ட அங்கீகாரம் தருகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து வருவாய்த்துறை செயலாளரின் விளக்கம் வெளியாகியுள்ளது.