வணிகம்

2 வருடங்களுக்குப் பின் சர்வதேச விமான சேவை... கட்டணம் குறைய வாய்ப்பு

webteam

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து சேவை இன்று (மார்ச் 27) முதல் தொடங்கியுள்ளது.

கடந்த 2020 மார்ச் 23 அன்று முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே பிரத்யேக போக்குவரத்து செயல்பட்டது. ஆனால் தற்போது அனைத்து சர்வதேச போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 8-ம் தேதி இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

அதேபோல விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளது.  விமான பணியாளர்கள் பிபிஇ கிட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவசர கால தேவைக்காக 3 இருக்கைகளை நிரப்பக்கூடாது எனும் விதிமுறையையும் தளர்த்தி இருக்கிறது. ஆனால் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகள் அவசியம் பயன்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்து செயல்படும் என நவம்பர் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒமைக்ரான் தொற்று காரணமாக அந்த அறிவிப்பு மாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் செயல்பட இருக்கிறது.

ஒவ்வொரு விமான நிறுவனங்களும் இதற்கான தயாரிப்புகளில் உள்ளன. எமிரேட்ஸ் நிறுவனம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பட இருக்கிறது. வாரம் 170 விமானங்களை இயக்குகிறது. விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் ஜூன் 1-ம் தேதி முதல் செயல்பட இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதுபோல ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது செயல்பாடு குறித்து அறிவித்திருக்கின்றன.

கொரோனாவுக்கு முன்பாக இந்தியாவில் (அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் இருந்தும்) இருந்து வெளிநாடுகளுக்கு ஒவ்வொரு வாரமும் 4.700 விமானங்கள் செயல்பட்டன. ஆனால் தற்போது செயல்பட்டு வரும் ஏர் பபுள் முறையில் விமானங்கள் செயல்படுவதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. 2,000 விமானங்கள் மட்டுமே (37 நாடுகளுக்கு மட்டும்) செயல்பட்டன. மேலும் இந்த முறையில் கனெக்டிங் விமானங்கள் மூலம் பறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது அனைத்து போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணம் செல்ல முடியும்.

கோடைக்காலம் தொடங்கியுள்ள சூழலில் சர்வதேச போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதால் இந்த துறையில் ஏற்றம் இருக்கும் என விமானப் போக்குவரத்து துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதையும் படிக்க: துபாயில் ரூ.1600 கோடி முதலீட்டு ஒப்பந்தம் - தொழில் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அழைப்பு