வணிகம்

கேரளாவில் நிபா வைரஸ்: பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வர்த்தகம் பாதிப்பு

Sinekadhara

கேரளாவில் ஏற்பட்டுள்ள நிபா வைரஸ் தாக்கத்தால் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாட்டு சந்தை பொள்ளாச்சியில் அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டுவருவது வழக்கம். கடந்த மூன்று வார காலமாக கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் தொற்றுக் காரணமாக சந்தை நடத்த கோவை மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. தற்போது கூடுதல் தளர்வுகளாக உள்ளூர் வியாபாரிகளை மட்டும் கொண்டு மாட்டு சந்தை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து இன்று மாட்டு சந்தை இயங்கியது. ஆனால் வைரஸ் பாதிப்பு காரணமாக வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து  வியாபாரிகள் வர அனுமதி இல்லாததால் இன்று சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக வருத்தம் தெரிவித்த வியாபாரிகள் சந்தை நடத்த தங்களுக்கு கூடுதல் தளர்வுகள் விதித்து தங்களுக்கு உதவவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.