வணிகம்

உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு பதவி விலகிய டிக்டாக் தலைமை செயலர் - பின்னணி என்ன?

உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு பதவி விலகிய டிக்டாக் தலைமை செயலர் - பின்னணி என்ன?

webteam

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கி வந்த டிக்டாக் செயலி தற்போது சர்வதேச அளவில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. மத்திய அரசு இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததில் இருந்து இந்த நெருக்கடி தொடங்கியது என கூறலாம். இந்திய சந்தையை இழந்த டிக்டாக் செயலி அமெரிக்கா சந்தையையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி டிக்டாக்கிற்கு தடை விதித்துள்ள அதிபர் ட்ரம்ப், இந்த செயலியின் அமெரிக்கா செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

எனவே மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் டிக்டாக்கை வாங்கும் போட்டியில் இருக்கின்றன. இந்த நிலையில் தான் டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின்மேயர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், அரசியல் சூழ்நிலை மாறி இருப்பதால் நிறுவனத்தில் இருந்து விலகுவதாகவும் கனத்த இதயத்துடன் இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். கெவின் மேயரின் முடிவை மதிப்பதாக பைட் டான்ஸ் நிறுவனமும் பதில் அளித்திருக்கிறது.

டிக்டாக் செயலிக்கு உலகம் முழுவதும் மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்ததால் பைட் டான்ஸ் நிறுவனம் அதனை தனி நிறுவனமாக்கி, அதற்கென தலைமை செயல் அதிகாரியை நியமித்தது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அமெரிக்கரான கெவின் மேயரை தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது பைட் டான்ஸ். ஆனால் அவர் பதவி ஏற்று 3 மாதங்களில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதற்கெல்லாம் பொறுப்பேற்றே அவர் பதவி விலகி இருப்பதாக சொல்லப்படுகிறது.