வணிகம்

மல்லையாவைவிட 10 மடங்கு அதிகம்: வங்கி மோசடி விசாரணை வலையில் அனில் அம்பானி நிறுவனங்கள்!

webteam

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட அவரது மூன்று நிறுவனங்கள் வங்கி மோசடி விசாரணை வலையில் சிக்கியிருக்கின்றன. இதுதொடர்பாக கடன் வழங்கிய வங்கிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

முகேஷ் அம்பானியின் தம்பியும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உரிமையாளருமான அனில் அம்பானி, கடன் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகிறார். ஜியோவின் அறிமுகத்தால் இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடும் சரிவைக் கண்டது. இதனால் அந்நிறுவனம் மீது டெலிகாம் சாதனங்களை உற்பத்தி செய்யும் ஸ்வீடன் நாட்டின் எரிக்ஸன் நிறுவனம் தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது.

இது ஒருபுறம் இருக்க, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என 3 வங்கிகளில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகளாக கருதி, அந்நிறுவனம் வாங்கியுள்ள கடன்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

அதுவும் அவர் பெற்ற கடன் என்பது விஜய் மல்லையா, நீரவ் மோடி பெற்ற கடனைவிட பத்து மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. இதனால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வங்கிக் கணக்கை மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளன, இந்த மூன்று வங்கிகளும். இந்த வங்கிகளில் இருந்து அனில் அம்பானியின் ரியலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.86,188 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மூலம் ரூ.49,193 கோடி, ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் மூலம் ரூ.24,306 கோடி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா டெல் நிறுவனம் மூலம் ரூ.12,687 கோடி என அனில் அம்பானி கடனாகப் பெற்றுள்ளார். மூன்று வங்கிகளும் அனில் அம்பானி தலைமையிலான மூன்று ரிலையன்ஸ் குழு நிறுவனங்களான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் ஆகியவற்றின் கணக்கு பரிவர்த்தனைகள் குறித்து விசாரணையைத் தொடங்க உள்ளதாக எதிர்பார்க்கபடுன்றன.

இதுதொடர்பாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடர்ந்த வழக்கில் ``தற்போதைய நிலையே தொடர வேண்டும். அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 13-ம் தேதி நடைபெறும்" என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்பிஐ மற்றும் ரிலையன்ஸ் குழுமம் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

இந்தக் குற்றச்சாட்டானது, அனில் அம்பானி தலைமையிலான மூன்று ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில், ரூ.5,500 கோடி மதிப்புள்ள கேள்விக்குரிய பரிவர்த்தனைகள் தொடர்பாக நடந்த தணிக்கைக்கு ஒரு வருடத்திற்கு பின்பு வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மல்லையா, நீரவ் மோடியை விட 10 மடங்கு அதிகமான தொகையை உள்ளடக்கிய விவகாரம் என்பதாலும், இது தொழில் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.