Rich Dad Poor Dad புத்தகத்தை எழுதிய ராபர்ட் கியோஸகி , இந்த மாதம் உலக அளவில் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்படும் என கணித்திருக்கிறார்.
Rich Dad Poor Dad புத்தகம் மூலம் உலகப்புகழ் அடைந்தவர் ராபர்ட் கியோஸகி. பொருளாதாரம் குறித்து அவர் எழுதிய இந்தப் புத்தகம், இதுவரையில் 3 கோடி பிரதிகள் விற்றிருக்கிறது. தமிழ் உட்பட 51 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வில் ஸ்மித் உட்பட நிறைய பிரபலங்கள் இந்தப் புத்தகத்தின் மூலம் பொருளாதாரத்தில் தெளிவு அடைந்ததாக கூறியிருக்கிறார்கள். சரி, பங்குச் சந்தை செய்திக்கு வருவோம்.
இந்தியப் பங்கச்சந்தை என்பது கடந்த சில மாதங்களாகவே இறங்குமுகத்தில்தான் இருக்கிறது. ஃபிக்ஸட் டெப்பாசிட் போன்ற சேமிப்பு முறைகளைவிட பங்குச் சந்தையில் அதிக லாபம் வரும் என்பதால் , பலரும் இப்போது பங்குச் சந்தையை தேர்வு செய்கிறார்கள்.
வருங்கால பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டால், பங்குச் சந்தையை தவிர வேறு எதில் முதலீடு செய்தாலும், தேவையான லாபம் கிடைக்காது என நம்பப்படுவதால் பலரும் பங்குச் சந்தையை தேர்வு செய்கிறார்கள். கொரோனாவுக்குப் பிறகு பெரிதாக கீழ் இறங்காத பங்குச் சந்தை, கடந்த சில மாதங்களாக சரிவில் இருப்பதால், எல்லோரும் கலக்கத்தில் இருக்கிறார்கள். FII என சொல்லப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ந்து அவர்களின் இந்திய பங்குகளை விற்றுக்கொண்டே இருக்கிறார்கள். பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு இது முக்கியக் காரணியாக பார்க்கப்படுகிறது. தங்கம், பிட்காயின், வெள்ளியைத் தவிர எல்லாமே இறங்குமுகத்தான் இருக்கின்றது.
ராபர்ட் கியோஸகி இதற்கு முன்னர் பல முறை இப்படியான CRASH குறித்து கணித்திருக்கிறார். அதனாலேயே அவர் தரும் எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த ஆண்டு நிச்சயம் மார்க்கெட் சரியும்' என கணித்திருக்கிறார். மீண்டும் ஒரு GREATER DEPRESSION நோக்கி உலகம் தள்ளப்படும் என எச்சரிக்கிறார் ராபர்ட் கியோஸகி. தங்கம், வெள்ளி, பிட்காயின் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். பெரிய சரிவு நிகழும் போது, லட்சக்கணக்கான நபர்கள் வேலையை இழக்க நேரிடும். வீடுகளை விற்க நேரிடும். அது பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கும். இந்த சரிவில் இருந்து மீள தனியாக தொழில் தொடங்குங்கள். ரியல் எஸ்டேட் தொழிலும் இந்த முறை சரியும் . ஆனால், இந்த மாதிரியான சமயத்தில் நீங்கள் உங்கள் முதலீட்டை சரியாக தேர்வு செய்தால், பெரும் பணக்காரர் ஆவதற்கான வாய்ப்பு மிக அதிகம். அடுத்த சில மாதங்கள் கொடுமையானதாக இருக்கலாம் என எச்சரிக்கிறார் ராபர்ட் கியோஸகி.
அதே சமயம், ராபர்ட் கியோஸகியின் கணிப்புகள் பொய்த்துப் போயும் இருக்கின்றன. இவர் இப்படி சொல்லும் போதெல்லாம், பங்குச் சந்தை தன்னை சரி செய்துகொண்டு மேல் நோக்கி நகர்ந்திருக்கின்றன என ஆறுதல் சொல்கிறார்கள் சில்லறை முதலீட்டாளர்கள். உங்கள் பங்குச் சந்தை போர்ட்ஃபோலியோ எப்படி இருக்கிறதென கமென்ட்டில் சொல்லுங்கள் .