வணிகம்

'முக்கால்வாசி மீண்டு வந்தாச்சு'-தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பேட்டி

kaleelrahman

இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பங்கேற்ற சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை இங்கு பார்க்கலாம்...

கொரோனா காலத்திற்குப் பிறகு பொருளாதாரம் உள்ளிட்ட வளர்ச்சிகளை பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக உங்களுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் தமிழகர்கள் அதிகம் பேர் மத்திய அரசில் இருக்கிறார்கள். இதை எப்படி பார்க்கின்றீர்கள்?

நீங்கள் சொல்வது மிகவும் சரி, நிறைய தமிழர்கள் நிதித்துறையில் இருக்கிறார்கள். எனது சின்ன வயதில் ஞாபகம் இருக்கிறது. வெங்கட்ராமன் நிதியமைச்சராக இருந்தது. அதன்பிறகு சிதம்பரம் இருந்தார். இப்போது நிதியமைச்சராக நிர்மலா சீத்தாராமன் இருங்காங்க. நிதித்துறை முதன்மை ஆலோசகராக ரகுராம் ராஜன் இருந்தார். அதன்பிறகு அரவிந்த சுப்ரமணியன் இருந்தார். அதேபோல எனக்கு இப்ப அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பொதுவாக தமிழர்களுக்கு பொருளாதாரம் மற்றும் கணக்கில் ஆர்வம் அதிகம் இருப்பதால் இதில் நமது பங்களிப்பு நன்றாக இருந்திருக்கிறது.

உங்களது பூர்வீகம் லால்குடி, சமீப காலத்தில் அங்கு சென்றிருக்கிறீர்களா அந்த ஊருடன் உங்களது தொடர்பு எப்படி இருக்கிறது?

நான் என்னோட சிறு வயதில் அங்கு போயிருக்கேன் அதன்பிறகு இரண்டு மூன்று முறை அங்கு சென்றிருக்கிறேன். எங்க அப்பா சுப்ரமண்ய பாரதியோட சிறந்த பக்தர். எங்க அப்பா ரயில்வேயில் பணியாற்றினாலும், தமிழ் பேராசிரியராக ஆக வேண்டும் என்பதுதான் அவரோட கனவு. அதனால் தமிழ் நிறைய படிச்சிருக்கார். நான் அவரிடம் இருந்துதான் தமிழ் கற்றுக்கொண்டேன்.

கொரோனா பொதுமுடக்க காலத்தில் இருந்து மீண்டு வருகிறோமா அல்லது மீண்டு வந்துவிட்டோமா?

முக்கால்வாசி மீண்டு வந்தாச்சு. பொருளாதாரம் இப்போது வி வடிவத்தில் மீண்டு வந்திருக்கிறது. முதல் காலாண்டில் 23 சதவீதம் பொருளாதார வளர்ச்சி குறைந்தது. அதன்பிறகு இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதமாக குறைந்தது. ஆனால் மூன்றாவது காலாண்டில் சிறதளவு வளர்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன். நான்காவது காலாண்டில் அதைவிட அதிகமான வளர்ச்சி இருக்கும். இவ்வாறாக அடுத்த ஆண்டு 11 சதவீதம் வளர்ச்சி வரவேண்டும். இந்திய வரலாற்றில் இதுவரை 11 சதவீதம் வளர்ச்சி வந்ததே இல்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.