தங்கத்தின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் இந்தியாவில், 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 89,000ஐ நெருங்கியுள்ளது. இது கடந்தாண்டில் உள்ள விலையைவிட 15% அதிகமாகும். சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சமீப நாட்களாகவே தங்கம் விலை ஒரு நாளைக்கு 2 முறை உயர்ந்து அதிர்ச்சி கொடுக்கிறது. அப்படி இல்லையெனில், காலையில் குறையும் தங்கத்தின் விலை, மாலையில் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டுகிறது. இதனால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் பொருளாதார மாறுபாடுகள், பணவீக்கம் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஜனவரி மாதம் ரூ. 7,000-த்திற்கு விற்கப்பட்ட 1 கிராம் தங்கம், ஏப்ரலில் ரூ.9,000-த்தை நெருங்கியது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதமான இப்போது ஒரு கிராம் ரூ.11,000த்தை தாண்டியுள்ளது.. கடந்த 10 மாதங்களில் 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரு.30,000 அதிகரித்துள்ளது..
அந்த வகையில் நேற்று முன் தினம், அக்டோபர் 4ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.. அதனைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் மட்டுமே, ரூ.89 ஆயிரத்தை நெருங்கவுள்ளது.
அக்டோபர் 6ஆம் தேதியான இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060க்கும் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,160க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,280க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் 166 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,66,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரு வாரத்தில் 22 காரட் தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.