இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிவேகமாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 90 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக உலகநாடுகள் பலவும் தங்கக்கட்டிகளை வாங்குவதில் அதிகளவில் ஆர்வம்காட்டி முதலீடுகளைச் செய்து வருகின்றன. அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சி கராணமாகவும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் நொடிக்கு நொடி உயர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆண்டின் துவக்கத்தில் ரூ.60 ஆயிரத்தில் இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது கிட்டத்தட்ட ரூ.90 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது. ஏறத்தாழ ஒரு ஆண்டுக்குள் ரூ.30 ஆயிரம் ரூபாய் அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது. தங்கம் ஒரு கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 11 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி 167 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலையேற்றம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாகப் பேசிய தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி, “பல்வேறு நாடுகள் தங்கத்தின் மீது பெருமளவில் முதலீடு செய்து வருகின்றன. பல நாடுகளில் உள்ள மத்திய வங்கிகளும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றன. தங்களிடம் இருப்பாக உள்ள அமெரிக்க டாலர்களை தங்கமாக மாற்ற தொடங்கியிருப்பதும் ஒரு காரணம். இவை எல்லாம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணமாக அமைகின்றன.
தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ச்சியாக அதிகரிப்பதால் தங்கத்தின் விலை இன்னும் உயர்ந்த வண்ணமே இருக்கும். இந்த வருடத்திற்குள்ளாகவே ஒரு சவரன் ஒரு லட்சம் என்று வரலாறு காணாத விலை உயர்வைப் பார்க்கலாம். கடந்த சில மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 37 ஆயிரம் ரூபாய் வரை ஒரு சவரன் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது. இந்த விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம்தான் இருக்கும்” எனத் தெரிவித்தார். பணவீக்கம் மேலும் உயர்ந்தாலோ அல்லது உலகளாவிய நெருக்கடிகள் மேலும் உயர்ந்தாலோ தங்கத்தின் விலை அடுத்த வருடத்திற்குள் சவரனுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்தைத் தொடும் என்கின்றனர் வல்லுநர்கள்..