வணிகம்

தங்கம் வாங்குவதில் பணக்காரர்களை மிஞ்சிய நடுத்தர மக்கள்! - ஆய்வில் சுவாரசியத் தகவல்

sharpana

இந்தியாவில் பணக்காரர்களைவிட நடுத்தர மக்களே தங்கத்தை அதிகளவில் வாங்குவதாக ஆய்வு ஒன்றில் சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது

இந்தியர்கள் தங்கம் வாங்குவது குறித்த விரிவான ஆய்வை இந்திய தங்க கொள்கை மையம் என்ற அமைப்பு நாடெங்கும் மேற்கொண்டது. இந்த ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தனி நபர் வருவாய் அடிப்படையில், விற்பனையான தங்க நகைகள் விற்பனை நிலவரம் ஆராயப்பட்டது. இதில் மொத்தம் விற்பனையான தங்கத்தில் 21 டன்னை ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு கீழ் வருவாய் உள்ளவர்கள் வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு 11 ஆயிரத்து 366 கோடி ரூபாய் ஆகும். ஒன்று முதல் 2 லட்சம் ரூபாய் வருவாய் உள்ளவர்கள் 28 ஆயிரத்து 968 கோடி ரூபாய் மதிப்புக்கு 58 டன் தங்கம் வாங்கியுள்ளனர். 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளோர் 39 ஆயிரத்து 447 கோடி ரூபாய் மதிப்புள்ள 78 டன் தங்கம் வாங்கியுள்ளனர்.

5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளோர் 59 டன் தங்கம் வாங்கியுள்ளனர். இதன் விலை மதிப்பு 29 ஆயிரத்து 623 கோடி ரூபாய் ஆகும். 10 முதல் 20 லட்சம் ரூபாய் வருவாய் பிரிவினர் 43 டன் தங்கத்தை 21 ஆயிரத்து 681 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர் 20 லட்சத்திற்கு மேல் வருவாய் உள்ளோர் 4 ஆயிரத்து 242 கோடி ரூபாய் மதிப்பில் 9 டன் தங்கம் வாங்கியுள்ளனர். நடுத்தர வருவாய் பிரிவினரே அதிகளவில் தங்கம் வாங்குவது இப்புள்ளிவிவரங்களில் உறுதியாவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தனி நபர் தங்க நுகர்வு என வரும்போது 20 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானம் உள்ளவர்களே முதலிடத்தில் உள்ளனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. திருமணத்திற்காகவே தங்கம் வாங்குவதாக ஆய்வில் பங்கேற்றோரில் 43% பேர் தெரிவித்திருந்தனர்.