வணிகம்

“இந்திய பொருளாதார நிலை அதிர்ச்சியளிக்கிறது” - கீதா கோபிநாத்

webteam

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்திருப்பது ஐ.எம்.எப்-க்கு அதிர்ச்சியளிப்பதாக அதன் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

ஐ.எம்.எப் (சர்வதேச நிதிய அமைப்பு) அமைப்பின் தலைமைப் பொருளாதார வல்லுநராக திகழ்பவர் கீதா கோபிநாத். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராவார். அமெரிக்காவில் உள்ள ஐ.எம்.எப்-யில் பணியாற்றும் இவர் இந்த வாரம் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இவர் பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், “இந்திய அரசு முக்கியமான பொருளாதார கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரவு செலவு அறிக்கை போன்றவற்றை சீரமைத்து, பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தி கடன் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் நெருக்கடியில் சிக்குவதை தவிர்க்க வேண்டும். அதற்கேற்ற கண்காணிப்புகளை உருவாக்கி தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் தொழிலாளர்களின் நலன், நிலங்கள் சார்ந்த பிரச்னைகள், வர்த்தக சந்தைகளின் சீர்திருத்தம், இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்” என ஆலோசனைகளை வழங்கினார். 

அத்துடன், “இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு, அனைத்து அமைப்புகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது போல ஐஎம்எப்-க்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி 4.5 % சரிந்துள்ளது. முதலீடுகளின் குறைவு, நுகர்வோர் வளர்ச்சி குறைவானது ஆகியவை இந்த சரிவு நிலைக்கு காரணமாகும். கிராமப்புறங்களின் வளர்ச்சி, பருவ மழை, வேளாண்துறை சீர்திருத்தங்கள், உணவு மேலாண்மை திட்டம் போன்றவற்றை மேற்கொண்டால் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியும். இந்திய ரிசர்வ் வங்கி பண வீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.