வணிகம்

ட்விட்டரை வாங்க முயற்சிக்கும் எலான் மஸ்க் - 126 பில்லியன் டாலரை இழந்த டெஸ்லா

Veeramani

ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு, 21 பில்லியன் டாலர் ஈக்விட்டி பங்களிப்பு நிதியளிப்பதற்காக, எலான் மஸ்க் தனது பங்குகளை விற்க வேண்டியிருக்கும் என்ற சந்தேகத்தில் டெஸ்லா $126 பில்லியன் மதிப்பை இழந்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் ட்விட்டர் ஒப்பந்தத்தில் ஈடுபடவில்லை, ஆனால் அந்த நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க், ட்விட்டரை வாங்குவதற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை பகிரங்கமாக வெளியிடாமல் இருப்பதால் அதன் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. நேற்று டெஸ்லாவின் பங்குகளில் ஏற்பட்ட 12.2% இழப்பானது அவரது டெஸ்லா பங்குகளின் மதிப்பில் $21 பில்லியன் இழப்புக்கு சமம். இது ட்விட்டர் ஒப்பந்தத்திற்காக எலான் மஸ்க்குக்கு தேவையான $21 பில்லியன் பணத்திற்கு சமம்.



இதேபோல நேற்று  ட்விட்டரின் பங்குகள் 3.9% சரிந்து 49.68 டாலராக குறைந்தது. இருப்பினும் மஸ்க் திங்களன்று ஒரு பங்கை $54.20 ரொக்கமாக வாங்க ஒப்புக்கொண்டார்.

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முயன்று வருகிறார். அவர் ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்துள்ளார். மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார். முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை  வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை மறுத்த எலான் மஸ்க், தற்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளார்.  

இதையும் படிக்க:ட்விட்டர் சிஇஓ டிஸ்மிஸ் செய்யப்பட்டால் அவருக்கு இத்தனை கோடிகள் கிடைக்குமாம்! வெளியான தகவல்