வணிகம்

தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் 43% பங்குகளை வாங்கியது டாடா சன்ஸ்

தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் 43% பங்குகளை வாங்கியது டாடா சன்ஸ்

Sinekadhara

தொலைத்தொடர்புத் துறைக்கு தேவையான சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் 43.35 சதவீத பங்குகளை டாடா சன்ஸ் வாங்கி இருக்கிறது. டாடா சன்ஸ் தன்னுடைய துணை நிறுவனமான பனாடோன் பின்வெஸ்ட் (Panatone Finvest) நிறுவனம் மூலமாக இந்த பங்குகள் வாங்கியிருக்கிறது.

டாடா குழுமம் 2019-ம் ஆண்டு தொலைத்தொடர்பு சேவையில் இருந்து வெளியேறியது. ஆனால், தற்போது மீண்டும் இந்த துறையில் களம் இறங்கி இருக்கிறது. 43.35 சதவீத பங்குகளை ரூ.1850 கோடிக்கு வாங்கி இருக்கிறது. மேலும், சந்தையில் இருந்து 26 சதவீத பங்குகளை ஓபன் ஆஃபர் மூலம் வாங்க இருக்கிறது.

தற்போது 5ஜி சேவைகள் வரத்தொடங்கி இருக்கின்றன. அதனால், அதற்கு தேவையான சாதனங்களுக்கு தேவை உருவாகும் என்பதால் இந்த நிறுவனம் கையகப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பெரிய வாய்ப்புகள் தொலைத்தொடர்பு துறையில் உருவாகும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சஞ்சய் நாயக் இருந்து வருகிறார். டாடா குழுமத்தின் இணைப்புக்கு பிறகு இவரே இந்தப் பொறுப்பில் தொடருவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொலைத்தொடர்பு துறையில் சேவை வழங்கும் நிறுவனங்கள் நமக்கு தெரியும். ஆனால், சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் சர்வதேச அளவில் குறைவாகவே உள்ளன. எரிக்சன், நோக்கியா, ஹூவாய் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தொலைத்தொடர்புத் துறையில் சேவை வழங்கும் நிறுவனமாக பெரிய வெற்றியை டாடாவால் அடையமுடியவில்லை. இந்த நிலையில், தொலைத்தொடர்புத் துறைக்கு தேவையான சாதனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி இருக்கிறது.