ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் டாடா மோட்டார்ஸ், வாகனங்களின் விலையை உயர்த்த முடிவெடுத்திருக்கிறது. அனைத்து தரப்பிலும் சராசரியாக 0.8 சதவீதம் அளவுக்கு ஏற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக விசாரிப்புகள் இருப்பதால் ஒரு சலுகையை வழங்க டாடா மோட்டார்ஸ் முடிவெடுத்திருக்கிறது. வாகனங்களை பொறுத்தவரை முன்பதிவு என்பது வேறு. ஒட்டுமொத்த தொகை செலுத்தி பில் பெறுவது என்பது வேறு.
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பில் செய்யப்படும் வாகனங்களுக்கு பழைய விலையில் வாகனம் வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்திருக்கிறது. ஒருவேளை ஆகஸ்ட் மூன்றாம் தேதிக்கு முன்பதிவு செய்திருந்து, ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு பின்பாக வாகனம் பில் செய்யப்படும் பட்சத்தில் புதிய உயர்த்தப்பட்ட விலையிலே வாகனம் வழங்கப்படும்.
இந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்றாவது முறையாக வாகனங்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. ஜனவரி, மே மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஸ்டீல் மற்றும் முக்கிய மூலப்பொருட்களின் விலை கடந்த ஓர் ஆண்டில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இதனால் கடந்த ஓர் ஆண்டில் 8 முதல் 8.5 சதவீதம் அளவுக்கு வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டும் பல முக்கிய கார் நிறுவனங்கள் விலையை உயர்த்தி இருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் மற்றும் டொயோடா ஆகிய நிறுவனங்களும் விலையை உயர்த்தி இருக்கின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மாருதி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்தியது.