வணிகம்

தமிழகத்தில் அந்நிய முதலீடு 21% சரிவு

webteam

கடந்த 2018ஆம் ஆண்டின் முதல் 2 காலாண்டுகளில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 21 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் த‌மிழகத்திற்கு 10‌ ஆயிரத்து 892 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு கிடைத்துள்ள அன்னிய நேரடி முதலீடு 13 ஆயிரத்து 898 கோடி ரூபாயாகும். அதேபோல், கடந்த ஆண்டில்‌ கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் அன்னிய நேரடி முதலீடு 40 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்திருக்கிறது. 

கர்நாடக மாநிலத்தில் 43 புள்ளி 3 சதவிகிதம் குறைந்து 17 ஆயிரத்து 234 கோடி ரூபாயாகவும், மகாராஷ்டிர மாநிலத்தில் 42 புள்ளி‌ 8 சதவிகிதம் குறைந்து 36 ஆயிரத்து 631 கோடி ரூபாயாகவும் அந்நிய முதலீடு இருந்துள்ளது. அதேநேரம், அண்டை மாநிலமான ஆந்திராவில், அன்னிய நேரடி முதலீடு 300 சதவிகிதம் அதிகரித்து, 14 ஆயிரத்து 572 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. அடுத்ததாக குஜராத் மாநிலத்தில், அன்னிய நேரடி முதலீடு 249 சதவிகிதம் உயர்ந்து 10 ஆயிரத்து 832 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இவ்வாறு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.