வணிகம்

125 கோடி டாலர் நிதி திரட்டியது ஸ்விக்கி: சந்தை மதிப்பு 550 கோடி டாலர்

Sinekadhara

உணவு விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விக்கி 125 கோடி டாலர் நிதி திரட்டி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் சாப்ட்பேங்க் நிறுவனம் முதன்முதலாக முதலீடு செய்திருக்கிறது. இதுதவிர ஏற்கெனவே ஸ்விக்கியில் முதலீடு செய்த ஆக்ஸெல் பார்னர்ஸ், வெலிங்க்டன் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. இது தவிர கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, பல்கன் எட்ஜ் கேபிடல், கோல்ட்மென் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.

இந்த முதலீட்டுக்கு பிறகு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 550 கோடி டாலராக இருக்கிறது. கடந்த முறை நிதி திரட்டியபோது 360 கோடி டாலராக சந்தை மதிப்பு இருந்தது. தற்போது திரட்டப்பட்டிருக்கும் நிதி போட்டியை சமாளிப்பதற்கு உதவும். திரட்டிய இந்த நிதியை நான்கு வழிகளில் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. உணவு விநியோகத்துறை பிரிவின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையை எடுப்பது, உணவு அல்லாத பிரிவில் கவனம் செலுத்துவது, டெக்னாலஜி மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல் மற்றும் நான்காவதாக நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

“எங்களது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதனைக் கருதுகிறோம். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உணவுத்துறையில் காத்திருக்கிறது” என ஸ்விக்கி தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.