வணிகம்

“உணவு விநியோகம் செய்யும் பெண்களுக்கு சம்பளத்துடன் இரண்டு நாள் மாதாந்திர விடுப்பு” - ஸ்விகி

EllusamyKarthik

இப்போதெல்லாம் நினைத்த நொடியில் மேஜிக் போல அவரவர் நினைத்த உணவினை உண்டு மகிழ உதவுகின்றன ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள். இந்தியாவை பொறுத்தவரையில் ஸ்விகி நிறுவனத்திற்கு அதில் தனியிடம் உண்டு. இந்நிலையில் தங்கள் நிறுவனத்தில் ரெகுலராக உணவு விநியோகம் செய்யும் பணிகளை கவனித்து வரும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டு நாள் மாதாந்திர விடுப்பை அறிவித்துள்ளது ஸ்விகி. 

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் டெலிவரி பிரதிநிதிகளை ஸ்விகி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

“மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் அசௌகரியங்கள் தான் பெரும்பாலான பெண்கள் டெலிவரி பணியை முடியாத பணியாக பார்ப்பதற்கு முதல் காரணம். அதனால்தான் எந்தவித கேள்வியும் கேட்காமல் பெண் டெலிவரி பிரதிநிதிகளுக்கு மாதத்தில் இரண்டு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பினை நாங்கள் அறிவித்துள்ளோம். இந்த துறையில் இதுவே முதல்முறையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவே மாதவிடாய் நேரத்தில் விடுப்பும் கொடுத்து அவர்களுக்கு அந்த நேரத்தில் ஊதியத்தையும் உத்திரவாதமாக அளிக்க காரணம்” என அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் Operations பிரிவு துணைத் தலைவர் மிஹிர் ஷா. 

அதோடு ஸ்விகி தனது ஊழியர்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான கழிவறை வசதியை ஏற்படுத்து தரும் நோக்கில் பல்வேறு உணவகங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. கூடுதலாக ஷெல் பெட்ரோல் பங்க் நிலையங்களிலும் கழிவறையை தங்களது ஊழியர்கள் பயன்படுத்த வழிவகை செய்துள்ளது ஸ்விகி. 

மேலும் பெண் விநியோக பிரதிநிதிகள் இரவு நேரங்களில் உணவை டெலிவரி செய்யவும் ஸ்விகி அனுமதித்துள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் வரும் ஆர்டரை பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கருதினால் அதை அவர்கள் மறுக்கும் ஆப்ஷனை வழங்கியுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. மருத்துவ உதவி தேவைப்படும் நேரங்களில் உயிர்காக்கும் உதவிக்கான சேவை ஆப்ஷனையும் தங்களது டெலிவரி பார்ட்னர் அப்ளிகேஷனில் சேர்த்துள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. இதில் ஸ்விகி ஹெல்ப்லைன், காவல் நிலையம் மற்றும் ஆம்புலன்ஸ்களை உதவி அழைக்கும் வசதிகளும் உள்ளதாம்.  

தகவல் : The Federal