ஆல்பெபட் சி.இ.ஓ-வாக தேர்வு செய்யப்பட்டுள்ள கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை சம்பள விவரங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்த சுந்தர் பிச்சை, அதன் தாய் நிறுவனமான ஆல்பெபட் நிறுவனத்திற்கு அண்மையில் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது சம்பள விவரங்கள் தொடர்பாக தகவல்கள் மெர்குரி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுந்தர் பிச்சை வருடாந்திர சம்பளம் 2 மில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 14.22 கோடியாகும். இந்த ஊதிய உயர்வு 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 240 மில்லியன் பங்குத் தொகுப்புகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1,707 கோடியாகும். இதுமட்டுமின்றி 2022ஆம் ஆண்டுக்குள் ஆல்பிட் பங்குகளில் இருந்து 90 மில்லியன் டாலர் (ரூ.640.15 கோடி) சுந்தர் பிச்சை ஊக்கத்தொகையாக் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இவர் பெரும் பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பெபட்டின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக சேர்ந்து, தற்போது அதற்கும் சி.இ.ஓ-வாக வளர்ந்திருக்கிறார்.